Monday 3 February 2014

புதினா (Mentha spicata) ஒரு மருத்துவ மூலிகையாகும்.

புதினா கொத்தமல்லி கருவேப்பிலை மூன்றையும் தினசரி தவறாது உணவில் சேர்த்து வரவேண்டும். எளிதில் கிடைப்பதால் இவற்றின் நன்மை பலருக்கும் தெரிவதில்லை.
புதினா (Mentha spicata) ஒரு மருத்துவ மூலிகையாகும். உணவின் வாசனைக்காக மட்டும் சேர்த்து வருகிறோம்...ஆனால் இதன் மருத்துவ பயன்களை தெரிந்துகொண்டால் தொடர்ந்து பயன்படுத்துவோம்.

புதினா கீரையில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு கார்போஹைடிரேட், நார்ப் பொருள் உலோகச் சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம் இரும்புச் சத்துக்களும், வைட்டமின் ஏ, நிக்கோட்டினிக் ஆசிட், ரிபோ மினேவின், தயாமின் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளன.சட்னி, ஜூஸ் எந்த விதத்தில் இதை பயன்படுத்தினாலும் இதன் பொது குணங்கள் மாறுவதில்லை என்பது முக்கியம்.
அசைவ உணவு மற்றும் கொழுப்பு பொருட்களை எளிதில் ஜீரணமாக்குகிறது.
இரத்தம் சுத்தமாகும். வாய் நாற்றம் அகலும். பசியை தூண்டும். மலச்சிக்கல் நீங்கும்.
பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் தீர புதினாக்கீரை உதவுகின்றது. ஆண்மைக் குறைவை நீக்கி முழுமையான இல்லற இன்பத்தை அனுபவிக்கவும் புதினாக் கீரை உதவுகின்றது.
வயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகின்றது. வாய்வுத் தொல்லையை அகற்றுகின்றது.
புதினாவை நீர் விடாமல் அரைத்து வெளி உபயோகமாகப் பற்றுப் போட்டால், தசைவலி, நரம்புவலி, தலைவலி, கீல்வாத வலிகளின் வேதனை குறையும்.
ஆஸ்துமாவையும் புதினாக் கீரை கட்டுப்படுத்துகின்றது.
மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
முகப்பரு உள்ளவர்களும், வறண்ட சருமம் உள்ளவர்களும் இதன் சாரை முகத்தில் தடவி வர பலன் கிடைக்கும்.
புதினாவை நிழலில் காயவைத்து பாலில் சேர்த்து கொதிக்கவைத்து டீக்குப் பதிலாக அருந்தி வந்தால். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
வயிற்றுப்போக்கு ஏற்பட்ட சமயம் புதினாக்கீரை துவையலை சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.
புதினாக்கீரை கர்ப்பிணிகளின் வாந்தியை நிறுத்த ஒரு கைகண்ட மருந்தாக இருந்து வருகிறது.

புதினா கஷாயம்:
25 கிராம் புதினா இலையை 500 மில்லி தண்ணீர் விட்டு நன்கு வேகும் வரை கொதிக்க வைத்து வடிகட்டிய கஷாயத்தில் எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து கலந்து 60 மில்லி அளவு தினம் இரண்டு வேளை சாப்பிட்டால் செரிமானக் குறைவு நிவர்த்தியாகும். கை, கால் மூட்டுக்களில் ஏற்பட்ட வலிகள் குறைந்து விடும்.

புதினாவை நிழலில் உலர்த்தி வைத்துக் கொண்டு நீர் சேர்த்து 30 மில்லி முதல் 60 மில்லி வரை கொடுத்து வந்தால் காய்ச்சல் தணியும். மூச்சுத்திணறல் நிற்க, புதினா இலையைச் சிறிதளவு எடுத்து மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து பின் இந்த நீரை குடித்தால் மூச்சுத்திணறல் நீங்கும்.

புதினா ஜூஸ்
தேவையான பொருட்கள்: புதினா இலை-1 கட்டு, தண்ணீர்-1 டம்ளர், சர்க்கரை-1 கப், இஞ்சி - கொஞ்சூண்டு, எலுமிச்சை சாறு-1 டீஸ்பூன், உப்பு-2 சிட்டிகை.

செய்முறை: வெயிலில் நிழலான இடத்தில காயவைத்து புதினா இலையை எடுத்து கொள்ளவேண்டும். தண்ணீரில் இஞ்சி, உப்பு, சர்க்கரை ஆகியவற்றை சில நிமிடம் கொதிக்க விடவும். சர்க்கரை கரைந்து தண்ணீர் ரெடியான பிறகு புதினா இலைகளைச் சேர்த்து மறுபடியும் கொதிக்க விடவும். சில நிமிடங்கள் கொதிக்க வைத்து அடுப்பிலிருந்து இறக்கி, இதை ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். அதன்பின் இந்தக் கலவையை வடிகட்டி, எலுமிச்சை சாறு சேர்க்கவும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை அருந்தி வரலாம்.

புதினா சாறு, பூண்டு சாறு, எலுமிச்சை சாறு இவைகளை கலந்து கூந்தலில் தடவி ஊற வைத்து . சிறிது நேரம் கழித்து அலசினால் பொடுகுக்கு மறைந்துவிடும். கூந்தலும் பட்டுபோல் பள பளக்கும்

புதினா பல் பொடி
இதை நாமே தயார் செய்துகொள்ளலாம்.புதினா இலைகளை வெயிலில் நன்றாக காயவைத்து அதனுடன் அதன் அளவில் எட்டில் ஒரு பங்கு உப்பு சேர்த்து தூள் செய்து சலித்து பாட்டிலில் எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும்.

இந்த பொடியை வைத்து தினசரி பல் தேய்த்து வந்தால் வாழ்நாள் முழுவதும் பல் சம்பந்தமான எந்த ஒரு நோயினாலும் பாதிக்கப்படமாட்டார். பற்கள் வெண்மையாக ஜொலிக்கும்.
ஈறுகளில் இரத்தம் வருவது, வாய் துர்நாற்றம் போன்றவை நீங்கும்.

வீட்டுத்தோட்டத்தில் புதினா:-
புதினாக் கீரையை தொட்டிகளில் எளிதாக வளர்க்கலாம். கடையில் வாங்கி வரும் புதினாக் கீரையில் இலைகளைப் பயன்படுத்தி விட்டுத் தூர எறியும் தண்டுகளை தொட்டி மண்ணில் ஊன்றி வைத்தால் போதும், கைக்கெட்டிய தூரத்தில் புதினா மூலிகை கிடைக்கும்.

அனைவரும் வீடுகளில் புதினாவை வளர்த்து நம் உணவில் சேர்த்து ஆரோக்கிய வாழ்வு வாழ்வோம்

No comments:

Post a Comment