Monday 3 February 2014

ஜென் : சிறுகதை

1. ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்கு கண் பார்வை கிடையாது. அப்போது அந்த வழியாக வந்த ஒருவன், " ஏய் கிழவா, யாராவது இந்த வழியாக சென்றார்களா?" என்று மரியாதையின்றி அதிகாரத்துடன் கேட்டான். அதற்கு அந்த துறவி "அப்படி யாரும் சென்றதாக தெரியவில்லை" என்று சொன்னார். சிறிது நேரம் கழித்து, மற்றொருவன் வந்து "ஐயா, இதற்கு முன் யாராவது சென்றார்களா?" என்று கேட்டார்.
அதற்கு அத்துறவியோ "ஆம், சற்று முன் இதே கேள்வியைக் கேட்டு சென்றான்" என்றார். மீண்டும் சிறிது நேரம் கழித்து இன்னொருவன் வந்தான். அவனும் துறவியிடம் "வணங்குகிறேன், துறவியாரே. இதற்கு முன் இந்த வழியாக யாராவது செல்லும் சப்தம் கேட்டதா?" என்று பணிவுடன் கேட்டான். உடனே துறவி "மன்னரே, வணக்கம். இந்த வழியாக முதலில் ஒரு வீரன் சென்றான், அடுத்ததாக ஓர் அமைச்சர் சென்றார். இருவருமே நீங்கள் கேட்ட கேள்வியைக் கேட்டுச் சென்றனர்." என்று சொன்னார். அப்போது ஆச்சரியத்துடன் மன்னர் "துறவியாரே, உங்களுக்குத் தான் பார்வை இல்லையே. பின்னர் எப்படி முதலில் வீரனும், அடுத்ததாக அமைச்சர் என்றும் சரியாக சொன்னீர்கள்" என்று கேட்டான். அதற்கு துறவி "இதை அறிவதற்கு பார்வை தேவையில்லை. அவரவர் பேசுவதை வைத்தே, அவர் யார், அவரது தகுதி என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்" என்று சொல்லி, "முதலில் வந்தவன் சற்றும் மரியாதையின்றியும், அடுத்து வந்தவரின் பேச்சில் அதிகாரமும், உங்களது பேச்சில் பணிவும் தென்பட்டது" என்று பொறுமையாக விளக்கிக் கூறினார்.


2. ஒரு முறை ஜென் துறவி ஒருவர், தன் சீடர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரது சீடர்கள் துறவியிடம், கதை கூறுமாறு கேட்டனர். அதற்கு அந்த துறவியும், அவர்களுக்கு ஒரு வாழ்க்கை பாடம் புகட்டும் வகையில் கதை சொல்ல ஆரம்பித்தார். அது என்னவென்றால், " ஒரு வியாபாரி ஒருவன் ரோட்டில் நடந்து கொண்டு சென்றான். அப்போது அந்த வியாபாரிக்கு எதிரே வந்தவன், அவனை நிறுத்தி, "என்னை ஞாபகம் உள்ளதா?" என்று கேட்டான். பின் "உங்களுக்கு என்னை நினைவு இருக்கிறதோ இல்லையோ, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்த நகரத்திற்கு வந்த போது, நான் என்னிடம் பணம் இல்லை என்று உங்களிடம் பணம் கேட்டேன். அதற்கு நீங்களும் என்னிடம் கொஞ்சம் பணத்தைக் கொடுத்து, ஒருவரின் வெற்றிப் பாதையில் செல்ல இது உதவட்டும் என்று வாழ்த்தி கொடுத்து உதவி புரிந்தீர்கள்" என்று அவருக்கு ஞாபகப்படுத்தினான். அந்த வியாபாரியும் யோசித்து, பின் அந்த வியாபாரி "ஆம், நினைவுக்கு வந்துவிட்டது என்று சொல்லி, வேறு என்ன சொல்லுங்கள்" என்று ஆவலுடன் கேட்டான். அதற்கு அவன் "இல்லை எப்படி அப்போது எனக்கு பணம் கொடுத்து உதவி புரிந்தீர்களோ, அதேப் போல் இப்போதும் ஒரு சந்தர்ப்பம் கொடுக்க முடியுமா?" என்று கேட்டான். அந்த வியாபாரி இப்படி கேட்டதும் வியந்து போனான்." என்று சொன்னார். பின் தன் சீடர்களிடம், ஒருவர் தமக்கு ஒரு முறை எதிர்பாராமல் உதவி செய்தால், மீண்டும் மீண்டும் அவர்களிடம் எதையும் எதிர் பார்க்கக்கூடாது. நமக்கு எந்த நேரத்தில் எது கிடைக்க வேண்டுமோ, அந்த நேரத்தில் நமக்கு கிடைக்க வேண்டும் என்று இருந்தால், நிச்சயம் அது நமக்கு கிடைக்கும் என்று சொன்னார். 

3.மொகுஜென் என்னும் ஜென் துறவிக்கு எப்படி சிரிப்பதென்றே தெரியாது, சொல்லப்போனால் எப்போதும் முகத்தை கோபமாக இருப்பது போலவே வைத்திருப்பார். ஒரு நாள் அவர் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆகவே "இந்த உலகத்தை விட்டு போகப் போகிறோம்" என்பதை உணர்ந்த அவர் தன் சீடர்களுக்கு ஒரு உண்மையை சொல்ல விரும்பினார். அது என்னவென்றால், நீங்கள் என்னிடம் பத்து ஆண்டுகளுக்கு மேல் படித்துள்ளனர். எங்கே நீங்கள் கற்றுக் கொண்ட ஜென் தத்துவத்தை வெளிகாட்டுங்கள் என்று சொன்னார். பின் யார் ஒருவர் அதனை சரியாக வெளிப்படுத்துகிறாரோ, அவரே என் வாரிசு மற்றும் அவர் என் கோப்பையை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறினார். அனைத்து சீடர்களும் பதிலளிக்காமல், மொகுஜென்னின் சிரிக்காத முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். என்சோ என்னும் சீடன், அவரைப் பார்த்தாலே மிகவும் பயப்படுவான். இருப்பினும் அவருடன் நீண்ட நாட்கள் இருந்ததால், அவரின் அருகில் சென்று, அங்குள்ள ஒரு மருந்து கோப்பையை நகர்த்தினான். இதுவே துறவியின் கேள்விக்கான பதில் என்பது போல் அந்த என்சோ வெளிப்படுத்தினான். அப்போது அந்த துறவியின் முகம் இன்னும் கடுமையாக மாறியது. பின் அந்த துறவி "என்ன அனைவருக்கும் புரிந்ததா?" என்று கேட்டார். அதனைக் கண்ட அவன், உடனே எழுந்து வெளியே சென்று விட்டு, திரும்பி பார்த்து, மீண்டும் அவரின் அருகில் சென்று, அந்த கோப்பையை நகர்த்தினான். பின்னர் இதுவரை சிரிக்காமல் இருந்த துறவியின் முகமானது, அவனது செய்கையைக் கண்டு, புன்னகையானது பீறிட்டு வெளிவந்தது. பிறகு அந்த துறவி அவனிடம் "முட்டாளே! நீ என்னுடன் பத்தாண்டுகள் இருந்தாய். நீயோ இதுவரை என் உடல் நிலை எவ்வாறு உள்ளது என்று பார்த்ததில்லை. இருப்பினும் நீ அதைப் புரிந்து கொண்டு, எனக்கு உதவினாய். ஆகவே நீ இந்த கோப்பையை எடுத்துக் கொள். இனிமேல் இது உனக்கு சொந்தமானவை" என்று சொன்னார்.


4. ஜென் மாஸ்டர் ஒருவர் அவரது சீடர்களுக்கு, அன்றைய போதனையில் அவரவரின் செயல்களுக்கான பிரதிபலனை பற்றி விவரித்து கொண்டிருக்கையில், அதனை ஒரு கதையின் மூலம் விளக்க நினைத்து, கதையை சொல்ல ஆரம்பித்தார். அது "விவசாயி ஒருவர் 1 பவுண்டு வெண்ணெயை ஒரு பேக்கரிக்காரருக்கு விற்று வந்தார். ஒரு நாள் அந்த பேக்கரிக்காரர், விவசாயி கொடுக்கும் வெண்ணெய் ஒரு பவுண்டு அளவு சரியாக உள்ளதா? என்று எடை போட்டு பார்த்தார். அப்போது அளவு குறைவாக இருந்தது என்பதை தெரிந்து கொண்ட அந்த பேக்கரிக்காரர் விவசாயி மீது கடுங்கோபம் கொண்டார். அதனால் ஆத்திரம் அடைந்த அவர், அந்த விவசாயியை நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றார். அப்போது நீதிபதி விவசாயிடம், "வெண்ணெயை அளந்து பார்க்க எந்த எடை மிசினை உபயோகிக்கிறாய்" என்று கேட்டார். அதற்கு அந்த விவசாயி 'நியாயம்' என்று பதிலளித்தார். பின் நீதிபதியிடம், "நான் பழங்காலத்தவன், என்னிடம் சரியான எடை மிசின் இல்லை. ஆகவே நான் ஒரு அளவுகோல் கொண்டு அளவு செய்வேன்" என்றார். உடனே நீதிபதி "வேறு எப்படி வெண்ணெயை எடை செய்தாய்?", என்று கேட்டார். அதற்கு விவசாயி நீதிபதியிடம் "ஐயா! பேக்கரிக்காரர் என்னிடம் நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே வெண்ணெய் வாங்குவது வழக்கம், நானும் அவரிடமிருந்து ஒரு பவுண்டு ரொட்டியை வாங்கி வருவேன். ஒவ்வொரு நாளும் பேக்கரிக்காரர் ஒரு பவுண்டு ரொட்டியை கொண்டு வந்த அதே சமயம், நானும் அதே அளவில் வெண்ணையை வெட்டி கொடுப்பேன். ஆகவே குறை, குற்றம் சொல்ல வேண்டுமெனில் அது என் தவறு இல்லை, அது முற்றிலும் பேக்கரிக்காரரை சார்ந்தது" என்று சொன்னார்." எனக் கதையை கூறி முடித்துவிட்டார். பின் சீடர்களுக்கு, "நாம் மற்றவர்களுக்கு என்ன செய்கிறோமோ, அதே தான் நமக்கும் விதிக்கப்படும்" என்று கூறி விளக்கினார்.



5. ஒரு பெரிய மடாலயத்தில் சீடர்கள் வட்டமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கையில் ஒரு வாக்குவாதம் எழுந்தது. அது என்னவென்றால், "திருடனாக இருப்பவனுக்கு எப்போதும் கெட்டது தான் நடக்கும்" என்று ஒரு பக்கமும், இன்னொரு பக்கம் "இல்லை, நல்லதும் நடக்கும்" என்றும் வாதாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களது குரலைக் கேட்டு வந்த ஜென் மாஸ்டர், என்ன பிரச்சனை என்று கேட்டார். அதற்கு அவர்கள் அந்த வாக்குவாதத்தை கூறினர். ஆகவே அதில் உள்ள உண்மையை புரிய வைப்பதற்கு, அவர்களுக்கு ஒரு கதையைக் கூற ஆரம்பித்தார். அது என்னவென்றால், "ஜென்கை என்பவன் ஒரு சாமுராய் மகன். அவன் 'எடோ' என்ற இடத்திற்கு பயணித்தார். அங்கு ஒரு உயர் அதிகாரியிடம் பணியாளாக சேர்ந்து, அவரின் மனைவியை காதலித்து, மேலும் தற்காப்பிற்காக, அந்த அதிகாரியின் பெருந்தொகையை எடுத்துக் கொண்டு, அவருடைய மனைவியுடன் ஓடிவிட்டான். பின்னர், இருவரும் நன்கு சந்தோஷமாக வாழ்வதற்கு திருடர்களாக மாறினர். ஆனால் அந்த பெண், ஜென்கையின் நடவடிக்கைகளை கண்டு வெறுப்படைந்தாள். அதனால் அவள் அவனை விட்டு சென்று விட்டாள். ஆகவே மனமுடைந்த அவன் 'பூசன்' என்ற மாகாணத்தில் பிச்சைக்காரனாக இருந்தான். மேலும் அவனது கடந்த காலத்தில் செய்த பாவத்திற்கு பரிகாரமாக, ஜென்கை தனது வாழ்நாளில் சில நல்ல காரியங்களை சாதிக்க எண்ணினான். அப்போது ஒரு குன்றின் மீது ஓர் ஆபத்தான சாலை இருப்பதால், பல பேர் மரணம் மற்றும் காயம் அடைகின்றனர் என்பதை தெரிந்து கொண்டு, அங்கு அந்த மலை வழியாக ஒரு சுரங்கம் வெட்ட எண்ணினான். பகல் நேரங்களில் உணவுக்கு பிச்சை எடுப்பதும், இரவு வேளையில் சுரங்கம் தோண்டுவதை வேலையாகவும் செய்து வந்தான். முப்பது ஆண்டுகள் ஆயிற்று, சுரங்கப்பாதை 2.280 அடி நீளம், 20 அடி உயரம் மற்றும் 30 அடி அகலம் ஆனது. வேலை முடியும் இரண்டு ஆண்டுகளுக்கு முன், அவன் பணியாளாக ஒரு அதிகாரியின் கீழ் வேலை செய்தான் அல்லவா, அவருடைய மகன் ஒரு திறமைமிக்க வாள்வீரன். அவன் ஜென்கையை கண்டுபிடித்து பழிவாங்க வேண்டும் என்று தேடி அலைந்து வந்தான். அப்பொழுது அந்த ஜென்கையும் அவன் கண்ணில் தென்பட்டார். அதனால் ஆத்திரமடைந்த அவன் "நான் உன்னை என் கைகளால் கொல்ல வேண்டும்" என்று கூறினான். அப்போது அந்த ஜென்கை "நீ என்னை தாராளமாக கொள்ளலாம், ஆனால் எனக்கு ஒரு ஆசை உள்ளது, அது என்னவெனில் இந்த சுரங்கத்தை முடித்ததும் நீ என்னை கொல்," என்று கூறினார். எனவே அந்த மகனும் அந்த நாளுக்காக காத்திருந்தான். பல மாதங்கள் கடந்தது. ஜென்கை மட்டும் தோண்டி கொண்டிருந்தான். எதுவும் செய்யாமல் இருந்ததால், அந்த வாள்வீரன் மிகவும் சோர்வடைந்தான். அதனால் அவனும் ஜென்கைக்கு உதவியாக சுரங்கம் தோண்ட ஆரம்பித்தான். ஓர் ஆண்டு காலம் ஆனதும், அந்த மகன் ஜென்கையின் வலிமையும் தன்னம்பிக்கையையும் கண்டு வியந்தான். கடைசியாக சுரங்கப்பாதை முடிந்தது. மக்களும் பாதுக்காப்பாக அந்த சுரங்கத்தில் பயணித்தனர். "இப்போது என் தலையை துண்டி, என் வேலை முடிந்தது" என்று ஜென்கை கூறினார். "எப்படி நான் என் சொந்த ஆசிரியர் தலையை துண்டிக்க முடியும்?" என்று கண்களில் இருந்து கண்ணீர் வழியக் கேட்டான்" என்று சொன்னார். பின் இறுதியில் ஜென் குரு சீடர்களிடம் "திருடனாக இருந்து, திருந்தியப் பின் நல்லதை நினைத்தால், அவனுக்கு நல்லதே நடக்கும்" என்று சொல்லி, உள்ளே சென்று விட்டார்.

No comments:

Post a Comment