Monday, 3 February 2014

ஜென் : சிறுகதை

1. ஜென் குரு பங்கேயின் மாணவன் ஒருமுறை அவரிடம் வந்து "மாஸ்டர், எனக்கு அடக்க முடியாத கோபம் வருகிறது. இதை எப்படி குணப்படுத்துவது?" என்று கேட்டான். அப்படியெனில் "ஏதோ ஒன்று உன்னை பயங்கரமாக ஆட்டி வைக்கிறது. சரி, இப்பொழுது அந்த அடக்க முடியாத கோபத்தை காட்டு" என்று சொன்னார். அதற்கு மாணவன் "அதை இப்பொழுதெல்லாம் காட்ட முடியாது" என்றான். "வேறு எப்பொழுது காட்ட முடியும்?" என்று குருவும் கேட்டார்.
அதற்கு அவன் "அது எதிர்பாராத நேரத்தில் தான் வருகிறது" என்றான். அப்போது குரு "அப்படியென்றால் அது உன்னுடைய சொந்த இயல்பாக இருக்க முடியாது. அவ்வாறு உனக்கு சொந்தமானதாக இருந்தால், நீ எந்த நேரத்திலும் எனக்கு அதை காண்பித்திருப்பாய். நீ பிறக்கும் போது அதை கொண்டு வரவில்லை, உன் பெற்றோரும் உனக்கு அதை கொடுக்கவில்லை. அப்படியிருக்க உனக்கு சொந்தமில்லாத ஒன்றை ஏன் உன்னுள் வைத்துள்ளாய் என்று யோசித்து பார். பின் உனக்கே புரியும்" என்று சொன்னார்.

2. ஒரு முறை ஜென் துறவி ஒருவர், தன் சீடர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரது சீடர்கள் துறவியிடம், கதை கூறுமாறு கேட்டனர். அதற்கு அந்த துறவியும், அவர்களுக்கு ஒரு வாழ்க்கை பாடம் புகட்டும் வகையில் கதை சொல்ல ஆரம்பித்தார். அது என்னவென்றால், " ஒரு வியாபாரி ஒருவன் ரோட்டில் நடந்து கொண்டு சென்றான். அப்போது அந்த வியாபாரிக்கு எதிரே வந்தவன், அவனை நிறுத்தி, "என்னை ஞாபகம் உள்ளதா?" என்று கேட்டான். பின் "உங்களுக்கு என்னை நினைவு இருக்கிறதோ இல்லையோ, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் இந்த நகரத்திற்கு வந்த போது, நான் என்னிடம் பணம் இல்லை என்று உங்களிடம் பணம் கேட்டேன். அதற்கு நீங்களும் என்னிடம் கொஞ்சம் பணத்தைக் கொடுத்து, ஒருவரின் வெற்றிப் பாதையில் செல்ல இது உதவட்டும் என்று வாழ்த்தி கொடுத்து உதவி புரிந்தீர்கள்" என்று அவருக்கு ஞாபகப்படுத்தினான். அந்த வியாபாரியும் யோசித்து, பின் அந்த வியாபாரி "ஆம், நினைவுக்கு வந்துவிட்டது என்று சொல்லி, வேறு என்ன சொல்லுங்கள்" என்று ஆவலுடன் கேட்டான். அதற்கு அவன் "இல்லை எப்படி அப்போது எனக்கு பணம் கொடுத்து உதவி புரிந்தீர்களோ, அதேப் போல் இப்போதும் ஒரு சந்தர்ப்பம் கொடுக்க முடியுமா?" என்று கேட்டான். அந்த வியாபாரி இப்படி கேட்டதும் வியந்து போனான்." என்று சொன்னார். பின் தன் சீடர்களிடம், ஒருவர் தமக்கு ஒரு முறை எதிர்பாராமல் உதவி செய்தால், மீண்டும் மீண்டும் அவர்களிடம் எதையும் எதிர் பார்க்கக்கூடாது. நமக்கு எந்த நேரத்தில் எது கிடைக்க வேண்டுமோ, அந்த நேரத்தில் நமக்கு கிடைக்க வேண்டும் என்று இருந்தால், நிச்சயம் அது நமக்கு கிடைக்கும் என்று சொன்னார். 
3. ஒரு ஜென் துறவி அவரது சீடன் ஒருவன் தோட்டத்தை சுத்தம் செய்வதை பார்த்து கொண்டிருந்தார். அவன் அதிக நேரமாக ஒரே வேலையை செய்தும் சுத்தம் இல்லாமல் இருந்தது. ஜென் மாஸ்டர் அவனை அருகில் அழைத்து ஒரு கதையை கூறினார். அது, "ஒரு முறை ஓர் சிறந்த ஓவியன் அவருடைய திறமையை முன்வைத்து ஒரு ஓவியத்தை வரைந்து, பின் அவருடைய சக தோழனிடம் "எப்படி இருக்கிறது" என்று கேட்டார். தோழனும் "இது நன்றாக இல்லை" என்று கூறினார். மீண்டும் மீண்டும் அந்த ஓவியர் வரைந்தவற்றை சரிசெய்ய, தோழனோ நன்றாக இல்லை என்று சொல்லி கொண்டு இருந்தார். அதனால் அந்த ஓவியர் தன் தோழனிடம், "நீ போய் எனக்கு கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா!" என்று தோழனை அனுப்பி விட்டு, பின்பு அவர் ஓவியத்தில் முழு கவனம் செலுத்தி ஓவியத்தை வரைந்தார். தண்ணீர் கொண்டு திரும்பிய தோழன், அந்த ஓவியத்தை கண்டு ஆச்சரியத்துடன் "படு சூப்பர்" என்று சொல்லி, அவரை பாராட்டினான். ஆகவே "எந்த ஒரு செயலையும் நாம் நம் முழு கவனத்துடன் செய்வதால் வெற்றி நிச்சயம். அதைவிட்டு அவ்த செயலை பிறர் பார்கின்றனரே என்று ஒரு பயத்துடன் செய்தால், அது ஒரு முழுமையை தராது" என்று ஜென் மாஸ்டர் அந்த சீடனுக்கு இந்த கதையின் மூலம் உணர்த்தினார்.

4. ஒரு கிராமத்தில் புத்திசாலியான ஜென் துறவி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் எந்த ஒரு பிரச்சனையையும் எளிதில் தீர்த்துவிடும் தன்மை உடையவர். ஆகவே அந்த கிராமத்தில் உள்ள மக்கள் தங்களுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் அவரிடம் சென்று, தங்கள் பிரச்சனையை சொல்லி சரிசெய்து கொள்வர். அத்தகைய கிராமத்தில் உள்ள மக்கள் தங்களுக்கு வேண்டிய பொருட்களை அருகில் உள்ள சந்தைக்கு சென்று வாங்குவது வழக்கம். சந்தை என்றாலே சற்று தூரமாக, சிறு சிறு தெருக்களை தாண்டி தான் செல்ல வேண்டியிருக்கும். மேலும் வாரத்திற்கு ஒரு நாள் "சந்தை நாள்" என்ற ஒன்று இருக்கும். இந்த நாளில் அனைத்து பொருட்களும் கிடைக்கும். அவ்வாறு ஒரு சந்தை நாளன்று மக்கள் அந்த சந்தைக்கு சென்று கொண்டிருந்தனர். அந்த நாள் மிகவும் கூட்டமாக இருந்தது. அந்த கூட்டம் சிறு தெருக்கள் வரை நின்றிருந்தது. அதிலும் மக்கள் அந்த சந்தைக்கு செல்லும் போது எப்போதும் ஒரே தெருவில் தான் செல்வார்கள். அந்த நாளன்று அந்த தெருவின் முனையில் ஒரு முரட்டுக்குதிரை இருந்தது. மக்கள் சந்தைக்கு செல்ல வேண்டுமென்றால், அந்த குதிரையை கடந்து தான் செல்ல வேண்டியிருந்தது. அந்த குதிரையின் பக்கத்தில் சென்றால், குதிரையின் முரட்டுத்தனத்தை பார்த்து, அப்படியே அந்த இடத்தில் நின்று மக்கள் எவ்வாறு அந்த குதிரையை அந்த இடத்தில் இருந்து அகற்றுவது என்று யோசித்துக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் அந்த ஜென் துறவியும் அந்த சந்தைக்குச் செல்வதற்கு வந்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்த மக்கள், அந்த துறவியிடம் தங்கள் பிரச்சனையை சொன்னார்கள். அந்த துறவி "அப்படியா?" என்று சொன்ன படியே, வந்த வழியாக திரும்பி சென்று, மற்றொரு தெருவின் வழியாக சந்தைக்கு சென்றார்.

5. ஜென் துறவி தன் சீடர்களிடம் பேசிக் கொண்டிருக்கையில், அவர்களிடம் "ஒருவருடைய நல்ல வாழ்க்கையின் ஆயுட்காலம் என்ன?" என்று கேட்டார். அதற்கு சீடர்களுள் ஒருவன் "வேறு எத்தனை நூறு வயது தான்" என்று கூறினான். குருவோ, "இல்லை" என்றார். "அப்படியெனில், 90 வயது" என்று மற்றவன் கூறினான். அதற்கும் "இல்லை" என்று குரு கூறினார். அப்படியே சீடர்கள், 80? 70? என்று சொல்ல, அதற்கும் மறுத்தார். பின் அவர்கள் பொறுமையிழந்து "வேறு என்னவென்று நீங்களே சொல்லுங்கள்" என்று கூறினர். அதற்கு குரு "ஒரு வினாடி தான்" என்று கூறினார். "அது எப்படி ஒரு வினாடியில் நல்ல வாழ்க்கையை வாழ்ந்ததாக சொல்ல முடியும்?" என்று அனைவரும் கேட்டனர். பின் குரு "நல்ல வாழ்க்கை என்பது ஒரு வினாடியில் தான் தெரியும். எப்படியெனில் ஒவ்வொரு வினாடியையும், வாழ்க்கையின் தொடக்கமாக நினைக்க வேண்டும். மேலும் அதையே முடிவு என்றும் நினைக்க வேண்டும். அதிலும் அந்த வினாடியில் எந்த ஒரு பழையதையோ அல்லது வருங்காலத்தையோ நினைத்து வாழக்கூடாது. ஒரு வினாடி பிறக்கிறதென்றால், அதை முழுமையாக அனுபவிக்க வேண்டும். அது தான் உண்மையான நல்ல வாழ்க்கை" என்று சீடர்களுக்கு சொல்லி, உண்மையான வாழ்க்கையின் தத்துவத்தைப் புரிய வைத்தார்.

No comments:

Post a Comment