பெண்’ எனும் தொழிற்சாலை?
சிறுநீரகம், கருமுட்டை, கர்ப்பப் பை...
நன்றி : பாரதி தம்பி, விகடன்....
2006-ம் ஆண்டு சகுந்தலாவுக்குத் திருமணமானபோது 20 வயது. தறிப் பட்டறையில் தன்னுடன் பணிபுரிந்த நவராஜை, காதல் திருமணம் செய்துகொண்டார். வெவ்வேறு சாதி என்பதால், இரு தரப்பு எதிர்ப்புகளையும் மீறித்தான் திருமணம் நடந்தது. மகிழ்ச்சியான மண வாழ்க்கையின் மூன்றாவது மாதத்தில் நவராஜ் மெள்ள ஆரம்பித்தான். தனக்குத் தெரிந்த ஒருவர் இரண்டு சிறுநீரகங்களும் பழுதாகி சாகக்கிடப்பதாகவும், 'நீ ஒரு சிறுநீரகத்தைத் தானமாகத் தந்து உதவினால், அவர் உயிர் பிழைப்பார்’ என்றும் சகுந்தலாவிடம் சொன்னான். இரக்க உணர்வு மிகுந்த பழங்குடிக் கலாசாரத்தில் வளர்ந்த சகுந்தலா, தன் கணவனின் வேண்டுகோளை ஏற்றார். குமாரபாளையத்தில் இருந்து, கோயம்புத்தூர் அழைத்துச் செல்லப்பட்டு சகுந்தலாவின் வலது பக்கச் சிறுநீரகம் அகற்றப்பட்டது. சிகிச்சை முடிந்ததும் தரகர்கள், நவராஜிடம் 50 ஆயிரம் ரூபாய் பணத்தைத் தந்தபோதுதான், அது தானம் அல்ல, வியாபாரம் என்று சகுந்தலாவுக்குப் புரிந்தது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு... சகுந்தலாவிடம் இன்னொரு 'தானத்துக்கு’ அடிபோட்டான் நவராஜ். இந்த முறை குரலில் பணிவு இல்லை. அதிகாரம் எஞ்சியிருந்தது. செயற்கைக் கருத்தரித்தல் மையங்களில் குழந்தையின் கருவை உருவாக்கத் தேவைப்படும் கருமுட்டைகளை சகுந்தலா தானமாகத் தர வேண்டும் என்றான் நவராஜ். 'மாதவிடாய் நேரத்துல வீணாப் போறதுதானே... அதை வெச்சு ஒரு பெண்ணுக்குக் குழந்தை பாக்கியம் கிடைச்சா நல்லதுதானே?’ என்றான். இந்த முறை இவன் இதற்காகப் பணம் பெறுவான் என்பது தெரிந்தும், வேறு வழியின்றி அதற்குச் சம்மதித்தார் சகுந்தலா. ஈரோடு தனியார் மருத்துவமனையில் 10 நாட்கள் ஹார்மோன் ஊசி போடப்பட்டு கருமுட்டைகள் சேகரிக்கப்பட்ட பின்பு அனுப்பிவைக்கப்பட்டார். இதற்காக நவராஜ் பெற்ற தொகை, 15 ஆயிரம் ரூபாய். இப்படி ஒன்றல்ல... இரண்டல்ல... கடந்த ஐந்து ஆண்டுகளில் 18 முறை சகுந்தலாவை கருமுட்டை வியாபாரத்தில் ஈடுபடுத்தியுள்ளான் நவராஜ்.