Sunday, 2 February 2014

ஆபீஸ் பாலிடிக்ஸ்: சிக்காமல் சமாளிப்பது எப்படி?

இந்த ஆபீஸ், அந்த ஆபீஸ் என்கிற எந்த பாகுபாடும் இல்லாமல் எல்லா ஆபீஸ்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது ஆபீஸ் பாலிடிக்ஸ். இந்த பாலிடிக்ஸில் நாம் சாதுர்யமாக நீந்தினால் தற்காலிகமாக பதவி உயர்வு, சம்பள உயர்வு என பல நல்ல விஷயங்கள் நமக்கு கிடைக்கலாம். ஆனால், சூழல் மாறினால் பதவி உயர்வும் சம்பள உயர்வும் போய், தண்ணி இல்லாத காட்டுக்கு வேலை மாற்றல் அல்லது வேலையையே இழக்கவேண்டிய கட்டாயமும் ஏற்படலாம். இந்த ஆபீஸ் பாலிடிக்ஸில் சிக்காமல் இருப்பது எப்படி என்பதைச் சொல்கிறார் போலாரிஸ் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டாளர் பாலமுருகன்.

''ஓர் அலுவலகம் என்றாலே ஊழியர்கள் இடையே நடக்கும் கருத்து வேறுபாடு, மோதல்கள் என அனைத்தும் கட்டாயம் இருக்கும். இது ஒருவகையான போட்டிதான். ஒருவரை ஒருவர் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக இந்த அரசியலே நடக்கிறது. இதைத் தவிர்க்க நினைத்தால், உங்களால் வாழ்க்கையில் எந்தப் பிரச்னையையும் சமாளிக்கவே முடியாது. அலுவலகத்தின் குணாம்சங்களில் இதுவும் ஒன்று என்று நினைத்தால் அதைச் சமாளிப்பதற்கான வழிமுறைகளைக் கற்றறிந்து, உங்களால் நிம்மதியாக வேலை செய்ய முடியும். ஆபீஸ் பாலிடிக்ஸை சமாளிக்கும் சில எளிய வழிகளைச் சொல்கிறேன்.   

வார்த்தைகள் உஷார்!
அலுவலகத்தில் உங்களைவிட வயதில் பெரியவர்கள், சிறியவர்கள் என பலருடன் வேலை பார்க்கவேண்டிய சூழல் உருவாகும். இச்சூழலில் யார் எப்போது என்ன செய்வார்கள் என்று தெரியாது. எனவே, எப்போதுமே கவனமாக வார்த்தைகளைக் கையாளுங்கள். அதாவது, சில நேரங்களில் விளையாட்டாக சில கமென்ட்களைச் சொல்லிவிட்டு, நாம் அதை மறந்திருப்போம். ஆனால், மற்றவர்கள் அந்த கமென்டை உரியவரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, எதிர்பாராத நேரத்தில் பெரும் பிரச்னையாக மாற்றுவார்கள். எனவே, எங்கு எந்த விஷயத்தைச் சொன்னாலும் மிகவும் கவனமாகப் பேசுவது அவசியம்.  
உணர்ச்சி வசப்படாதீர்கள்!
ஓர் அலுவலகச் சூழலில், நாம் மற்றவரை தவறாகப் பேசுவதும், மற்றவர்கள் நம்மை தவறாகப் பேசுவதும் சகஜமான விஷயம்தான். இதுபோன்ற சமயத்தில் நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு சண்டை போடக்கூடாது. நீங்கள் சண்டை போடுவதினால், நீங்கள் பேசியது உண்மையே என்று ஊர்ஜிதமாகிவிடும். சில நேரங்களில் அளவுக்கு மீறி போகும்போது மட்டும் உண்மை நிலையை விளக்க முயற்சி செய்யலாம். அல்லது, சம்பந்தப்பட்ட அதிகாரி யிடம் நேரில் சென்று பொறுமையாக உங்கள் நிலையை விளக்கலாம். எனவே, ஆபீஸ் பாலிடிக்ஷில் மாட்டாமல் இருக்க, எது நடந்தாலும் பேசாமல் அமைதியாக இருப்பது பல வம்புகளிலிருந்து நிச்சயம் காக்கும்.
ஊழியர்களுடனான உறவு!
உங்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ அனைவருடனும் நட்புடன் இருப்பது அவசியம். ஏனெனில், அலுவலக நட்புதான் உங்களின் இயல்பு என்ன என்பதை வெளிஉலகிற்கு காட்ட உதவும். அதாவது, வேறு வேலைக்கு நீங்கள் முயற்சிக்கும்போது அந்த அலுவலக ஊழியரும், நீங்களும் நண்பராககூட இருக்கலாம். அந்தச் சமயத்தில் உங்களைப் பற்றி தவறான கருத்தை அவர் சொல்லும்போது உங்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும்.
எதிரிகள் வேண்டாமே!
அலுவலக வேலை என்பது உங்களுக்கும் உங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் தினப்படி தேவைகளை நிறைவேற்ற வழி அமைத்துத் தரும் ஒரு வடிகால். நீங்கள் செய்யும் எந்தவொரு காரியமும் இந்த வடிகாலை மூடிவிடக் கூடாது. அலுவலகத்தில் முடிந்தவரை எந்தவிதத்திலும் எதிரிகளை உருவாக்கிக்கொள்ளாமல் இருப்பது இந்த வடிகால் எப்போதும் திறந்திருக்க உதவும். உங்கள் உயரதிகாரிகள், சக ஊழியர்கள் பற்றி தேவை இல்லாமல் கமென்ட் அடிக்காமல் இருந்தாலே போதும், உங்களுக்கு எந்த எதிரியும் உருவாக மாட்டார்கள். இல்லாவிட்டால் உங்களைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி உங்களைக் காலிபண்ணிவிடுவார்கள்.

சீனியர்களுடன் நட்புறவு!
எல்லா அலுவலகத்திலும் சீனியர்கள் கட்டாயம் இருப்பார்கள். உயர்பதவியில் இருப்பவர்கள்தான் சீனியர்கள் என்றில்லை,  உங்கள் குழுவில் உங்களின் நிலையிலே வேலை பார்ப்பவர்கூட சீனியர்தான். அவர்களைவிட நீங்கள் கொஞ்சம் நன்றாக வேலை பார்த்தாலும் சரி, கொஞ்சம் விஷயம் தெரிந்தவராக இருந்தாலும் சரி, அதை சீனியர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
நீங்கள் அவர்களை முந்தும் சமயங்களில் சீனியர்களிடம், 'நான் இதைச் செய்துள்ளேன். இது சரியா?’ என்று கலந்துகொள்வது நல்லது. அப்போதுதான், இவர் நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறார் என்று நினைத்து உங்களை எல்லா வேலையையும் செய்யவிடுவார்கள். உங்களைக் காலிபண்ணவேண்டும் என்கிற எண்ணமும் அவர்களுக்கு வராது!'' என்று முடித்தார் பாலமுருகன்.
இதையெல்லாம் சரியாக செய்தாலே போதும், ஆபீஸ் பாலிடிக்ஸில் சிக்காமல் அலுவலகத்தில் சிறப்பாக பணியாற்ற முடியும்.

No comments:

Post a Comment