Friday, 25 October 2013

தன்னையறிதல் ........


தன்னையறிதல் என்பது குருவருளின் துனையோடு முயற்சியும், பயிற்சியும் கைகூடியவர்களுக்கு மட்டுமே வாய்த்திடும் அற்புதம். ஐம்புலன்களை நெறிப்படுத்தி, மன இயக்கத்தை ஒழுங்கில் கொண்டு வர முயல்வதே தன்னையறிதலின் அதாரம். மனதை ஒழுங்கில் கொணர்வதும் அதை தக்க வைப்பதும் தொடர் நிகழ்வு ஆகும்.மனம் ஒடுங்கினால் தெளிவுகள் தோன்றி அவை ஒன்றில் நிலைக்கும். அப்போது தோற்ற மயக்கங்கள் விலகும். இத்தனை நாளாக நிலையானதாய் நாம் நினைத்துக் கொண்டிருந்த நிலையற்றவைகளைப் பற்றிய புரிதல்கள் உருவாகும். நம்மில் இருந்து நாம் விலகி நமது நிலையினை தரிசிக்கும் ஒரு படிநிலையாக இதனை சித்தர்கள் கூறியிருக்கின்றனர்.


பதஞ்சலி அருளியபதஞ்சலி யோகம்என்கிற நூல் தன்னையறிதலையும் அதன் படி நிலைகளையும் தெளிவாய் விளக்குகிறது. இதனை அடிப்படையாக கொண்டே பலரும் தன்னையறிதல் குறித்த தமது அனுபவங்களை நமக்கு விட்டுச் சென்றிருக்கின்றனர். இன்றைக்கும் கூட பலரும் பல பெயரில் தன்னையறிதலை வியாபாரமாக செய்து கொண்டிருக்கின்றனர். தன்னையறிதல் விலை கொடுத்து வாங்கக் கூடிய ஒரு பொருள் அல்ல, நாலைந்து வகுப்புகளுக்குச் செல்வதால் மட்டும் கைகூடும் வித்தையும் அல்ல.

தன்னையறிதல் @ மௌனம்

சித்தர்களைமௌனகுருஎன்றும் அழைப்பதுண்டு.குருவானவர் தனது சீடர்களுக்கு வழங்கும் தீக்சையைமௌன தீட்சைஎன்பர். குருவானவர் மௌனமாக இருந்து சீடருக்கு தீக்சையை மனத்தால் உணர்த்துவது என்று பொருள் படும். மௌனம் என்பது தன்னையறிதலின் உயர் படிநிலைகளில் ஒன்று. இந்த நிலையினை சித்தர்கள் சும்மாயிருத்தல் என்கின்றனர்.சித்தர்கள் மௌனத்தை மூன்றாக கூறியிருக்கின்றனர். உடலை எவ்வித அசைவில்லாமல் வைத்திருப்பதை ஒரு நிலையாகவும், வாய்மூடி மௌனமாய் இருப்பதை ஒரு நிலையாகவும்,மனதை சலனமின்றி வைத்திருப்பதை ஒரு நிலையாகவும், இவற்றுள் மனதின் மௌனத்தை தலை சிறந்ததாயும் கூறியிருக்கின்றனர்.
பேசாமல் வாய்மூடி இருப்பதையே மௌனம் என நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் அது மௌனத்தின் ஆரம்பநிலைதான்.அகமாய் இருந்தாலும், புறமாய் இருந்தாலும் சரி,மனித வாழ்வில் சப்தங்கள் தவிர்க்க இயலாததாகவே இருக்கிறது....சப்தங்கள் ஒரு போதும் தானே அடங்குவதில்லை, அவற்றை அடக்கிடவும் முடியாது.ஆனால் சப்த்தத்தில் இருந்து விலகி நிசப்தத்தில் இருந்திட முடியும்.இதையே மௌனம் என்கிறோம்.
புறத்தின் சப்தங்களில் இருந்து விலகிவிட தனிமையான சூழலை ஏற்படுத்தி அமைதி காணலாம்.ஆனால் இந்த மௌனத்தினால் பெரிதான பலன் ஏதும் இருக்காது.புறத்தில் அமைதி நிலவினாலும் மனம்,புத்தி ஆகியவை ஓயாத இரைச்சலுடன் இருக்கும்.
ஆனால் அகத்தின் சப்தங்களில் இருந்து விடுபடுவதில்தான் தன்னையறியும் சூட்சுமம் உள்ளடங்கியிருக்கிறது.மனம், புத்தி இவற்றை மௌனத்தால் நிறைத்திட முடியுமானால் அதுவே உயரிய ஞான சித்தி நிலையாக இருக்கும். ஆழ்ந்த மௌன நிலையில் எல்லா புதிய பரிமாணங்களும் அதன் அர்த்தங்களும் புலனாகும்.

தன்னையறிதல் @ கவனித்தல்

தன்னையறிதலின் படிநிலைகளில் முக்கியமானது இந்த கவனித்தல்.கவனித்தல் என்கிற ஒன்று இல்லாமல் எந்த மனிதனும் இருக்க முடியாது.ஆனால் எதை கவனிக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது, வித்தியாசம்.இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் நம்மை சுற்றியுள்ள எல்லாவற்றையும் கவனிக்கிறோம்.அடிப்படையில் கவனித்தல் என்பது புறத்தில் ஐம்புலன்கள் மூலமே சாத்தியமாகிறது.நம்முடைய கவனத்தில் கடந்து போகும் ஒவ்வொரு நிகழ்வும் மனதில் பதிந்து உணர்வுகளை தூண்டுகிறது. இந்த உணர்வுகளின் கொந்தளிப்பில்தால் நாம் செயலாற்றுகிறோம்.ஒரு கட்டத்தில் இந்த உணர்வுகளுக்கு அடிமையாகி அதன் ஏவலில் அடிமைகளாய் செயல்படுகிறோம் என்பதுதான் உண்மை.

இந்த உணர்வுகள் எதுவும் நமக்குள் உருவாவதில்லை.அது கோபமாய் இருக்கட்டும், மகிழ்ச்சியாய் இருக்கட்டும் அவை புறத்தே இருந்து நமக்குள்ளே வந்து தங்கி நம்மை ஆட்டுவிக்கிறது. கொஞ்சம் கவனித்துப் பாருங்கள், இந்த உணர்வுகள் எதுவும் நிரந்தரமானவை அல்ல, துக்கமோ,மகிழ்ச்சியோ எல்லா நேரமும் நம்மில் இருப்பதில்லை....நம்முடையதைப் போல நமக்குள் நுழையும் இந்த உணர்வுகள், பெரும்பாலும் வருத்தங்களையும், துக்கங்களையும், அழுத்தங்களையும், கவலைகளையுமே கொண்டு தருகிறது.
ஒரு கணம் இந்த உணர்வுகள் என்னுடையதில்லை, எனக்கானதும் இல்லை என தீர்மானித்து அவற்றை உங்களுக்குள் நுழைய விடக்க்கூடாது என தீவிரமாய் கவனிக்க ஆரம்பியுங்கள்...அற்புதங்கள் அங்கேதான் ஆரம்பமாகும்.சித்தர்களும் இதைத்தான் முன்வைக்கிறார்கள்.புறத்தை கவனிப்பதை விட்டு அகத்தை கவனிக்கச் சொல்கிறார்கள்.
தன்னை அறிந்திட தன்னை, தனக்குள் கவனித்தல் அவசியமாகிறது.கவனிக்க ஆரம்பியுங்கள்...கவனம் குவிய குவிய நமக்குள் அலைகிற எல்லாம் கட்டுக்குள் வரும்.அற்புதங்கள் ஆரம்பமாகும்.

தன்னையறிதல் @ மனம்

காற்றை விட வேகமானது, கடலை விட ஆழமானது,அத்தனை உணர்ச்சிகளின் ஊற்றுக் கண்,ஆக்கம், அழிவு என்பவற்றை தீர்மானிப்பது என ஏகப்பட்ட பெருமைகளை தன்னகத்தே கொண்டது மனித மனம்.“மனம் இருந்தால் மார்க்கம் உண்டுஎன்கிற பொது மொழியும், “மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டாஎனகிற சித்தர் மொழியும் மனத்தின் மான்பினை விளக்கும்.

நவீன அறிவியலின் படி மனமானதுஉணர்வு சார் நிலை”,”அறிவுசார் நிலைஎன இரண்டு முகங்களை கொண்டது. சித்தர்களைப் பொறுத்தவரையில் இதனை மூன்று நிலைகளாய் கூறியிருக்கின்றனர். நான் அவற்றைபுத்தி நிலை”,”சித்தி நிலை”,”முக்தி நிலைஎன்பதாக புரிந்து கொண்டிருக்கிறேன்.

தன்னைத் தவிர, சுற்றியுள்ள அனைத்திலும் தன்னை இருத்தி அதுதான் தான் என நிலைக்கும் மனநிலைதான் புத்தி நிலை.தனக்கென வாழ்வதாக நினைத்துக் கொண்டு புற கூறுகளில் மட்டுமே வாழும் ஒரு நிலை இது. இந்த மன நிலையில் அகங்காரம்(Eg0) மட்டுமே செழித்தோங்கி இருக்கும்.

நாம் பெரும்பாலும் இத்தகைய மன நிலையிதான் வாழ்கிறோம்.

தான் யாரெனெ வெளியில் தேடாமல், தனக்குள்ளே தேடிடும் மன நிலைதான் சித்தி நிலை. இந்த நிலையில் அகங்காரம் அழிந்திருக்கும்.விருப்பு, வெறுப்புகளை நீக்கி எதிலும் விலகியிருந்து பார்க்கும் பக்குவமான ஒரு மன நிலை இது.

முந்தைய இரு நிலைகளின் முதிர்ந்த மூன்றாவது நிலை இது. தன்னை தான் உணர்ந்த பேரானந்தமான மன நிலையை முக்தி நிலை எனலாம். அன்பும், கருணையும் மட்டுமே ஊற்றெடுத்திடும் உயரிய நிலை இது.இதுவே தன்னையறிந்த நிலை.

உடலின் ஆரோக்கியம் மனதில்தான் இருக்கிறது. மனம் ஒழுங்கில் வந்தால் உடல் உறுதியாகும் அதனால் உயிர் நிலைக்கும். இதை உணர்ந்தால் மனதின் மகத்துவம் புரியும்.