'சமூக வலைத்தளங்களான பேஸ்புக், ஆர்குட், டிவிட்டர் போன்ற இணையதளங்களில், இளைஞர்கள் பலரும் மணிக்கணக்கில் மூழ்கிக் கிடப்பது நினைவாற்றல் திறன் முற்றிலும் பாதிப்புக்குள்ளாவதோடு உடலுக்கும் தீங்கும் ஏற்படும்’ என்று எச்சரிக்கை செய்துள்ளது சமீபத்திய ஆய்வு ஒன்று. இதனால் பாதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகின்றன. உதாரணத்துக்குச் சில சம்பவங்கள்:
சம்பவம் 1: பிரபல கல்லூரியின் பேராசிரியர், எப்போதும் கையில் செல்போன் வைத்திருப்பார். அதில், ஃபேஸ்புக், டிவிட்டர் என்று பிஸியாக இருப்பதால், தினமும் வகுப்பறைக்கும் செல்போன் எடுத்துச் செல்வதும், அடிக்கடி போனை எடுத்துப் பார்ப்பதுமாக இருப்பார். காலையில் விழிப்பதும், தூங்குவதற்கு முன்பு கடைசியாகப் பார்ப்பதும் சமூக வலைத்தளங்களில்தான். ஒரு கட்டத்தில் இந்தப் பழக்கத்துக்கு அடிமையாகி, வகுப்பு எடுக்கவேண்டிய நேரத்தையும் மறந்து வெவ்வேறு வகுப்பறைக்குச் சென்றுவிடுவார். இதனால் கல்லூரியில் அவருக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டது. மாணவர்கள் அவரை 'மிஸ்டர் மெமரி லாஸ்’ என்று பட்டப்பெயர் வைத்து அழைக்கும் அளவுக்குப் பிரச்னையானதால் அவர் தற்போது தீவிர சிகிச்சையில்.
சம்பவம் 2: ப்ளஸ் டூ படிக்கும் சென்னையைச் சேர்ந்த மாணவி அவர். கையில் எப்போதும் ஆறாம் விரல்போல் மொபைல் போன் ஒட்டிக் கொண்டு இருக்கும். சரியான நேரத்துக்கு சாப்பாடு, தூக்கம் இன்றி, கழிவறை போனால்கூட கையில் மொபைலைப் பார்த்தபடியே இருப்பார். எஸ்.எம்.எஸ், சேட்டிங், ஃபேஸ்புக் என்று எந்த நேரமும் பிஸியாக இருந்ததால் 10ம் வகுப்பில் 96 சதவிகிதம் மதிப்பெண் வாங்கியவர், சமீபத்தில் நடந்த பள்ளி காலாண்டுத் தேர்வில் அனைத்து பாடங்களிலும் பெயில். மாணவியின் டி.சி.யைப் பெற்றுக்கொள்ளும்படி பள்ளி நிர்வாகம் வற்புறுத்துகிறது. தற்போது அந்த மாணவிக்கு மனநல மருத்துவர் தீவிரச் சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கிறார்.
சம்பவம் 3: சமூகப் பிரச்னைகளைக் குறித்து களத்தில் இறங்கி வேலை பார்க்கும் நல்ல போராளி அவர். சமீப காலமாக மணிக்கு ஒரு ஸ்டேடஸ் போட்டு ஃபேஸ்புக்கில் மூழ்கி கிடந்ததால் அவரது நினைவாற்றல் திறமை மங்கியது. அலுவலகத்தில் ஊழியர்களிடம் எதையாவது சொல்வார். அவர்கள் அதைச் செய்ததும், 'நான் எப்போது சொன்னேன்...? இந்த வேலையை நான் சொல்லவே இல்லையே’ என்று சாதிக்கும் அளவுக்கு ஞாபகமறதி பிரச்னை அதிகரித்துவிட்டது. இவரும் தற்போது மனநலமருத்துவரிடம் கவுன்சிலிங் பெற்று வருகிறார்.
சோஷியல் மீடியாவில் மூழ்கிப்போனவர்களின் இன்றைய எதார்த்த நிலை இதுதான். ஏதோ ஒருவர் இருவருக்கு மட்டும் அல்ல. தொடர்ந்து சோஷியல் மீடியாவில் மூழ்கி இருப்பவர்களுக்கு நிச்சயம் நினைவாற்றல் பாதிப்பு ஏற்படும் என்று ஆணித்தரமாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த மனநல மருத்துவர் சிவசங்கரியிடம் பேசினோம்.
'மணிகணக்கில்... நாள் கணக்கில் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி, உற்றுப் பார்த்துக் கொண்டு எதைப் பற்றியும் சிந்திக்காமல், கையில் கிடைக்கும் பீட்ஸா, பர்கர், கூல்டிரிங்க்ஸ், நொறுக்குத் தீனிகள் போன்ற ஜங்க் ஃபுட்களைச் சாப்பிட்டுக் கொண்டு இருப்பதால் மனம் மட்டும் அல்லாமல் உடலும் கெட்டுப் போய்விடுகிறது. இதனால், மூளையும் பலவீனமடைகிறது. இந்தச் சமூக வலைதளத்தால் குழந்தைகள், நடுத்தர வர்க்கத்தினர்... என அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். கஞ்சா, மது போதைக்கு ஒருவர் எப்படி அடிமையாக இருக்கிறாரோ, அதற்குச் சமமானதுதான் இந்த வலைத்தள போதையும்.
நம்முடைய மூளையில், 'டோபோமைல்’ மற்றும் 'ஷெரப்போநைன்’ போன்ற திரவங்கள் சுரக்கின்றன. ஒரே விஷயத்தில் தொடர்ந்து ஈடுபடுபவர்களுக்கு இந்த இரண்டு ரசாயண வேதி பொருள் சுரப்பதில் பிரச்னைகள் ஏற்படும். இது சரியாக இல்லாவிடில் மனசிதைவு, மனசோர்வு, மனஅழுத்தம், மனப்பதற்றம்... போன்றவை ஏற்படும். மனித மூளையில், 'இப்பாப்கேம்பஸ்’, 'அமித்தலா’ போன்ற இடங்கள்தான் நம்முடைய நினைவாற்றல் தொடர்பான செயல்களைக் கட்டுப்படுத்துகின்றன. இந்த ரசாயனங்கள் சரியாகச் சுரக்காதபோது, இந்தப் பகுதிகள் மற்றும் இதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் சேர்த்துப் பாதிக்கப்படுகின்றன. ஒரே இடத்தில் உட்கார்ந்துகொண்டு வீடியோ கேம்ஸ், நெட்டில் சாட் செய்வது, இணையத்தில் அதிகமாகப் பேசுவது போன்ற செயல்களால் நரம்புகள் மற்றும் முதுகுதண்டுவட அமைப்பு பாதிக்கப்பட்டு உடல் வலியோடு, உடல் பருமன் உள்ளிட்ட பிரச்னைகளும் ஏற்படுகின்றன!
இதுதவிரவும், ஒற்றை தலைவலி, கண் எரிச்சல், நினைவாற்றல் மங்கும்திறன்... என்று பிரச்னைகள் அதிகரித்துக்கொண்டே இருக்கும். பெரும்பாலும் இளைய தலைமுறைதான் இந்த சோஷியல் மீடியாவால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
சோஷியல் மீடியா வெறும் மனம் மற்றும் உடல் நலப் பிரச்னைகளை மட்டும் ஏற்படுத்துவதில்லை. பல நேரங்களில் அது சைபர் கிரைம் எனப்படும் இணைய குற்றங்களுக்கும் வழிவகுத்துவிடுகிறது' என்றவர் இதில் இருந்து எச்சரிக்கையாக இருப்பதற்கான வழிகளைச் சொன்னார்.
தகவல் தொழில்நுட்பச் சாதனங்களின் பயன்பாடுகள் எந்த நோக்கத்துக்கு பயன்படுத்த வேண்டுமோ அதற்கு மட்டும் பயன்படுத்தவேண்டும்.
அதிக நேரம் இணையத்தளங்களில் உலா வருவதை நிறுத்தவேண்டும்.
நாட்டு நடப்புகள் பற்றித் தெரிந்துகொள்ள இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் அதிகபட்சமாக அரை மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரத்துக்கு மட்டும் பயன்படுத்துவது நல்லது.
கடினமான, மிக இறுக்கமான அலுவலக சூழலில் வேலைபார்ப்பவர்கள் கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் செய்துகொள்ள ஃபேஸ்புக், டுவிட்டர் பக்கங்கள் செல்லலாம். ஆனால், அந்தப் பக்கங்களுக்கு அடிமையாகிவிடக்கூடாது. இந்தச் சூழலைத் தவிர்ப்பதற்கு புத்தகம் படிக்கலாம். நண்பர்களிடம் மனம்விட்டுப் பேசலாம்.
பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் விளையாட்டில் அதிகம் ஈடுபடலாம். எழுதுவது, பிடித்த பாடல்களைக் கேட்பது, ஒவியம் வரைவது, தாத்தா- பாட்டி போன்ற பெரியவர்களுடன் நேரத்தைச் செலவிடுவது, வீட்டை நிர்வகிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதும் மூளைக்குப் புத்துணர்ச்சியைத் தரும்.
பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்ள் மொபைல் போன் பயன்படுத்தும் பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.
பள்ளி மாணவ- மாணவிகளுக்கு சமூக வலைதளங்களின் தேவை இல்லை. எனவே, பெற்றோர்கள் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
வீட்டில் இருக்கும் பெண்கள் சமூக வளைதளத்தில் நேரத்தைச் செலவிடும்போது அது கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்படுத்தலாம்.
எந்த ஒரு விஷயமும் நமது கட்டுபாட்டுக்குள் இருக்கவேண்டும். கட்டுபாடு இல்லாமல்போனால், அதற்கு நாம் அடிமையாகி விடுவோம். இனிவரும் காலங்களில்... இன்னும் இதுபோன்ற ஏராளமான பிரச்னைகள் நம்மை தாக்குவதற்குக் காத்துக்கொண்டு இருக்கின்றன. ஏனென்றால் உலக அரங்கில் இணையதளத்தைப் பயன்படுத்துபவர்களின் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் இந்தியா இடம்பெற்றிருக்கிறது என்பதுதான் நடுங்க வைக்கும் நிஜம்!'' என்று எச்சரித்தார்.
நம் நினைவாற்றலை மெல்ல மெல்ல கொல்லப்போகும் 'வலை’யில் இனியும் வீழத்தான் வேண்டுமா?
No comments:
Post a Comment