Sunday 2 February 2014

ஆரத்தி

நம் முன்னோர்கள் கடைப்பிடித்த பாரம்பரிய நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் நம் நலனுக்காக ஏற்படுத்தப்பட்டவை. ஆனால் நம் தலைமுறை அதை சரியாக உணர்வதில்லை.பழங்காலத்தில் வாழை இலையில் சாப்பிடுவதற்கு முன்னதாக அந்த உணவை நீர் கொண்டு ஆராதித்து விட்டு அதன் பின்னரே சாப்பிடத் துவங்குவர். இதுபோன்று செய்வதால் நாம் உண்ணும் உணவு புனிதப்படுவதாக அவர்கள் நம்பினர்.

தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமானது, ஆரத்தி எடுக்கும் நடைமுறை. ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை பின்பற்றப்படும் இந்த நடைமுறை வெறும் சடங்குக்காக செய்யப்படுவதில்லை.சாதாரண நிகழ்வாக இதை புறக்கணிக்கிறோம். ஆனால் இதில் ஆழமான அர்த்தம், அதுவும் விஞ்ஞான நலன் காணப்படுகிறது. இதில் முக்கியமான கருத்துகள் மறைந்துள்ளது. தூரத்து பயணம் முடித்து வருபவர்களுக்கு புதிதாய் திருமணம் முடித்து வீட்டிற்கு வரும் மணமக்கள், மகப்பேறு முடித்து வீட்டிற்கு வரும் பெண் ஆகியோருக்கு ஆரத்தி எடுக்கும் நடைமுறை வழக்கத்தில் உள்ளது.ஆரத்தி எடுப்பது என்றால் ஒரு தாம்பாளத் தட்டில் தண்ணீரில் மஞ்சள் அரைத்து சேர்த்து அதில் சிறிது சுண்ணாம்பு சேர்த்து கலக்க வேண்டும். மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த தண்ணீருக்கு சிவப்பு நிறம் வருகிறது. இதை ஒரு பரந்த பாத்திரத்தில் எடுத்து அதற்கு இரு பக்கங்களிலும் இரண்டு தீச்சுடர் எழுப்பி சம்பந்தப்பட்ட நபரின் உடலுக்கு சுற்றும் 3 முறை சுற்றி விடுவதையே ஆரத்தி என்று கூ றுகின்றோம்.ஒவ்வொரு மனிதனைச் சுற்றிலும் ஆரா (aura ) என்ற சூட்சுமப் பகுதி இருக்கிறது.மனிதனுக்கு ஏற்படும் திருஷ்டி மற்றும் அவனைச் சேரும் தீய கிருமிகள் ஆகியவை அந்த சூட்சும பகுதியில் முதலில் பதிந்து பின்னரே அவனுள் புகுகின்றன. திருமணம், குழந்தை பெறுதல், வெற்றியடைதல் ஆகியவற்றால் பலருடைய திருஷ்டி- மணமக்கள், தாய்-சேய், வெற்றியாளர் மீது அதிகம் விழவாய்ப்பு கூடுதலாக உள்ளது. மஞ்சள் மற்றும் சுண்ணாம்புக்கு கிருமிகளை அழிக்கும் திறனுண்டு என்பதை நாம் கண்டறிந்துள்ளோம். அந்த நபரின் மேல் வந்து சேர்ந்திருக்கும் விஷ அணுக்களை அழிப்பதே ஆரத்தியின் உத்தேசம். ஆரத்தி எடுப்பதன் மூலம் நம் உடலில் சேரும் விஷ அணுக்களை அழித்து நம் நலன் பேனுவதோடு பிறருக்கும் அந்த விஷகிருமிகள் பரவாது தடுக்கிறது.வீட்டினுள் நுழையும் முன்பே 'ஆரா' சரீரத்தில் சேர்ந்துள்ள திருஷ்டி மற்றும் கிருமிகளை அகற்றி தூய்மைப்படுத்திய பின்னரே சம்பந்தப்பட்டவர்களை வீட்டுக்குள் அழைத்துக் கொண்டு போகும் வழக்கம் உள்ளது. எனவே அது போல் ஆரத்தி எடுக்கும் போது பொருள் அறிந்து சரியான பாவனையுடன் செய்வது முக்கியம். அப்போது தான் அதன் பலனும் முழுமையாக இருக்கும்.

No comments:

Post a Comment